திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் திமுக பாஜக நேரடியாகக் களம் காண்கிறது. இதில், திமுக சார்பில் வாக்காளருக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.
பாஜக சார்பில் எவ்வளவு தருவார்கள் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய், ஆயிரம் தருவார்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால் எதுவும் தரப்படவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 5ம் தேதி, ‘க்யூ.ஆர் கோட்’ அச்சடிக்கப்பட்ட டோக்கன் கட்டுகளை அதிமுக நிர்வாகிகளிடம் பாஜக சார்பில் தந்து, ‘ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு டோக்கன் எனத் தாங்க’ எனச் சொல்லியுள்ளனர். ‘டோக்கன் எல்லாம் நாங்கப்போய் தரமுடியாது, ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் தந்து என்ன ஆச்சுன்னு ஊருக்கே தெரியும். நாங்க ரிஸ்க் எடுக்கவிரும்பல. பணம் தர்றதாயிருந்தா தாங்க; கொண்டு போய்த் தர்றோம்’ எனச்சொல்லி அதிமுக பூத் கமிட்டியினர் ஒதுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
வீடு வீடாகச் சென்ற பாஜகவினர், 4 வாக்குகள் கொண்ட ஒரு குடும்ப அட்டைக்கு க்யூ.ஆர் கோட் மற்றும் சீரியல் எண் அச்சடிக்கப்பட்ட ஒரு டோக்கன் வழங்கியுள்ளனர். இந்த டோக்கனை கொண்டு சென்று திருவண்ணாமலையில் உள்ள மிகப்பிரபலமான நகைக்கடையில் தந்தால் நான்கு கிராம் தங்கக் காயின் வழங்கப்படும் எனச் சொல்லி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
டோக்கன் வாங்கிய அதிமுக பிரமுகர் ஒருவர், தி.மலையில் உள்ள பிரபலமான அந்த நகைக் கடைக்குச் சென்று டோக்கனை தந்தபோது, அங்கிருந்த மேலாளர் இது என்ன எனக் கேட்டுள்ளார். இந்த டோக்கனை காட்டினால் நான்கு கிராம் தங்கக் காயின் வழங்குவீர்கள் எனச் சொல்லி தந்தார்கள், அதனால் வந்தேன் எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியான அந்த அந்த நகைக் கடை மேலாளர், அதெல்லாம் ஒன்றும் இல்லை வெளியே போங்கள் எனக்கூற வெளியே வந்துள்ளார்.
இதுகுறித்து, பாஜக வேட்பாளருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது, ‘மே 3 ஆம் தேதி அந்த கடைக்குச் சென்று டோக்கன் தந்தால் தான், 4 கிராம் தங்க நகை அல்லது அதற்கு ஈடாகப் பணம் தருவார்கள். இப்போது, போய் தந்தால் தரமாட்டார்கள். வெற்றியோ, தோல்வியோ எதுவந்தாலும் டோக்கனுக்கு பொருளோ அல்லது பணமோ நிச்சயம் தருவோம்’ என்றார்கள். மே 3ஆம் தேதி தருவதை இப்போதே தரலாமே எனக் கேட்டபோது, அதற்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள். 4 கிராம் தங்கக் காயின் என்றால் அதன் மதிப்பு சராசரியாக 18 ஆயிரம். அப்படியாயின் ஒரு ஓட்டின் மதிப்பு 4,500 ரூபாயா?