மத்திய பா.ஜ.க. அரசுக்கு வெங்காய விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஏகத்துக்கும் ஏறியது. இதனால் வெங்காயம் காட்சிப் பொருளாக மாறி வருவது, மக்கள் மனதில் நெருப்பை அதிகமாகியுள்ளது. வெங்காயத்தை சீரியசாக எடுத்துக்காததால், மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தையே கடந்த காலங்களில் ஏற்படுத்தியிருக்கு என்று சொல்லப்படுகிறது. இது பற்றியெல்லாம் கவலைப்படாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலை ஏற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது, "நான் சாப்பாட்டில் வெங்காயமும் பூண்டும் சேர்த்துக்கிற சமூகத்தில் பிறக்கலை'ன்னு சொல்லி, எல்லாத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை வாங்கிக்கொண்டார்.
மேலும் எதையும் சமாளிக்கிற சூழ்நிலை தெரியவில்லை என்று மக்களும் கவலையில் இருப்பதாக தெரிகிறது. அதோடு, ஜி.எஸ்.டி .வரி வசூலிப்பில் கெடுபிடியைக் காட்டிவரும் மோடி அரசு, அதிலிருந்து மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை ஒவ்வொரு மாநிலத்திற்கும் செட்டில் பண்ணாமல் கோடிக்கணக்கில் நிலுவையில் வைத்து இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. தமிழகத்துக்கு கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூபாய் 7,605 கோடியைத் தரவில்லை என்கின்றனர். இதுபோல் மோடி அரசால் நிதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாநிலங்கள், டிசம்பருக்குள் அவற்றை செட்டில் செய்யாவிட்டால், மோடி அரசுக்கு எதிராக உச்ச நீதின்றத்தில் வழக்குத் தொடுக்க அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் இதுகுறித்து விவாதிக்க, 18-ந் தேதி கூடுகிறது.
இந்தச் சூழலில், நிலைமையை சமாளிக்க, ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று மோடிக்கு இவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதில் 5 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 12 சதவீதத்திற்கும், 12 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 18 சதவீதத்திற்கும் மாற்றினால்தான் சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர் என்கின்றனர். இதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியே கசிந்ததால், இப்போதே மோடி அரசுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. இதை காங்கிரஸ் ப.சி. உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் கையில் எடுக்கத் தொடங்கி விட்டதாக சொல்கின்றனர்.