Published on 07/09/2019 | Edited on 07/09/2019
சமீபத்தில் எச்.ராஜா பேசும் போது, ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலைமைதான் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என அவர் கூறியதை திமுக கட்சியினர் பலரும் விமர்சித்து வந்தனர். எச்.ராஜா பேசியதை எல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம் என்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதியும் கருத்து தெரிவித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை இந்த நான்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்றும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளரா இருக்கும் ராஜா பேசியுள்ளார்.
பாஜக பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளையும் அதில் இருக்கும் முக்கிய தலைவர்களையும் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையை தன் கொள்கையாக பா.ஜ.க. கடைப்பிடித்து வருவது அனைத்து எதிர்க்கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தையும், கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சரான டி.கே.சிவக்குமாரையும், மத்திய பிரதேசத்தில் இருக்கும் கமல்நாத் குடும்பத்தினரையும் பழிவாங்கி வருவதை அரசியல் வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கும் தி.மு.க.வை அட்டாக் செய்வதற்கான வியூகங்களையும் பா.ஜ.க. வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை திமுகவும் பாஜகவின் நடவடிக்கையை உற்று கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.