
திருமாவளவன் உடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூசகமாக பதில் அளித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “11 ஆம் தேதி காலை 11 மணியளவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். மதுரையில் கோவில் தரிசனம் செய்கிறார். மேலும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான ஆலோசனைகளை பொதுச் செயலாளர் வழங்கினார். நாம் எப்படி செயல்பட வேண்டும், எப்படி செயல்பட்டால் மக்களின் வாக்குகளை கொண்டு வருவது எப்படி என்பது குறித்தெல்லாம் சொன்னார். கழக நிர்வாகிகளிடம் இதையெல்லாம் சொல்லி நடவடிக்கைகள் எடுக்க சொன்னார். ஏனென்றால் இப்பொழுது அதிகமான நேரம் இருக்கிறது. இப்பொழுது கழக வளர்ச்சிக்கான பணிகள் குறித்து கழக தொண்டர்களிடம் நெருங்கி பழகி கட்சியை வளர்ப்பது குறித்து கூறினார்.
திருமாவளவன் கொடுத்த அறிவுரையை ஏற்றுக் கொள்வீர்களா எனக் கேட்கின்றனர். கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா எனக் கேட்கின்றனர். “யார் வந்தாலும் என்ன. திருமாவளவன் எங்கள் சகோதரர். ஜெயலலிதா திருமாவளவன் மீது அன்பும் பாசமும் கொண்டவர். கூட்டணி குறித்து பொதுச் செயலாளரிடம் தான் கேட்கணும்” என்றார்.