மத்திய பா.ஜ.க மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளான் மசோதா, இந்தியாவில் விவசாயத்தை நம்பி வாழும் ஒட்டுமொத்த விவசாயிகளின் உரிமையைப் பரித்துள்ளதோடு அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாய விளைபொருட்கள் விலையை கார்பரேட் கம்பெனிகளே நிர்ணயம் செய்து விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றும் பெருங்கேடுதான் இந்த மசோதாவால் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, பா.ஜ.க. அரசு அந்த மசோதாவை நிறைவேற்றி விட்டது.
இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் விவசாயிகளுக்கு எதிராக சட்ட மசோதா இயற்றிய மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அதற்கு துணைபோன மாநில எடப்பாடி அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகிற 28 ஆம் தேதி தமிழகம் முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆர்பாட்டம் நடத்துகிறது.
ஈரோட்டில் இன்று கூட்டணிக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ம.தி.மு.க. ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி தலைமையில் தி.மு.க. மா.செ. சு.முத்துச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், கொ.ம.தே.க. மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொன்டனர். 28 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்றும் விவசாயிகள் ஏராளமானோரை பங்குபெற வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.