Skip to main content

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்! -அமைச்சர் சீனிவாசன்

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

AIADMK will win in 234 constituencies! - Minister Srinivasan

 

 

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக எதிர்க்கட்சியாக வருவதும் கூட சந்தேகம்தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார். 

 

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பாலகிருஷ்ணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை, பவர் பிளாக் சாலை, ஆழ்துளை கிணறு, மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 

 

அதன்பின் பாலகிருஷ்ணபுரம் விரிவாக்க பகுதி நீதிபதி காலனி, அனுமந்த நகர் தெற்கு மாலைப்பட்டி, ஸ்ரீநகர், அபிரமி நகர் தெற்கு ரங்கநாதபுரம், ராமர் காலனி உள்பட 15 இடங்களில் 10 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் 66 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதேபோல் அந்த பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசும்போது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் நம்பித்தான் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதே நேரத்தில் நாங்கள் எதை செய்தாலும் மத்திய அரசுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், மத்திய அரசு நல்லது செய்தால் ஆதரிப்பதையும்  தவறு செய்தால் கண்டிப்பதையும் தமிழக அரசு செய்து வருகிறது. தற்போது வேளாண்மைக்காக புதுமையான திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். 

 

அது விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டம் என்பதால் தமிழக அரசு ஆதரிக்கிறது. ஆனால், ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி மக்களை துன்புறுத்துகின்றனர். எதற்கெடுத்தாலும் குறைகளை சொல்லி மக்களை குழப்புவது ஸ்டாலினின் வேலையாக உள்ளது. முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்வதால் ஜெயலலிதாவுக்கு பிறகு மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. அதிமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் ஆனால் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு திமுக எதிர்க்கட்சியாக கூட வருமா என்பது சந்தேகம் தான். மக்கள் எதிர்பார்த்தபடி விலைவாசி உயராத, சட்டம் ஒழுங்கு கெடாத நல்லாட்சி தமிழகத்தில் நடக்கிறது இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்