தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு தேர்தல் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படவும் இருக்கிறது. கும்பகோணத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாங்குவதற்கு கூட்டுறவு சங்கத்தின் அலுவலர்கள் மதியம்வரை சங்க கட்டிடத்துக்கு வராததால் ஆத்திரமடைந்த திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய பகுதிகளில் முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2 ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கான வேட்புமனுக்கள் வாங்க அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.
கும்பகோணம் துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 16 கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அந்தந்த பகுதியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் காத்திருந்தனர். பட்டீஸ்வரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் என்.ரவிக்குமார் மதியம் 12 மணி வரை சங்க அலுவலகத்துக்கு வராததால் ஆத்திரமடைந்த, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், அங்கிருந்த சங்க செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியனிடம் புகார் மனுகொடுத்தனர். பின்னர் கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு வெளியே வந்தவர்கள், தமிழக அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்களை தொடர்ந்து வந்த திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் வரும் வரை நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து அமர்ந்தனர். உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுகவினர் காலை முதல் சங்க கட்டிடத்தில் காத்திருந்தனர். பிற்பகல் 12.30 மணி வரை வேட்பு மனுவை வாங்க கூடிய அலுவலர் மங்கை, சங்க செயலாளர் ஆர்.மணிசேகரன் வராததால் ஆத்திரமடைந்த திமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் எஸ். பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். அதே போல தாராசுரம், மருதாநல்லூர், சோழபுரம், தேவனாஞ்சேரி, கொ.கருப்பூர், களம்பரம் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மதியம் வரை வரவில்லை.
கும்பகோணம் எம்,எல்,ஏ சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னதிதெருவில் உள்ள துணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.’’ அப்போது துணைப்பதிவாளர் முகாம் சென்றிருப்பதாக கூறிவிட்டனர்.
’’ கூட்டுறவு சங்கத்தின் தேர்தலில் ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் இந்த தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. வேட்பு மனுக்களை வழங்க காலை முதல் சங்கத்தின் உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், செயலாளர்கள் ஆகியோர் மதியம் வரை சங்கத்துக்கு வரவில்லை. இதில் ஏதே உள்நோக்கம் உள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும் ’’என்கிறார் கும்பகோணம் எம்,எல்,ஏ அன்பழகன். இதனை தொடர்ந்து 16 சங்கங்கள் முன்பாகவும் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த முறை நடந்த தேர்தலில் கூட்டுறவு சங்க தேர்தல் நியாயமான நடைபெற வாய்ப்பு இல்லை என்று அந்த தேர்தலில் திமுக போட்டியிடாது என அப்போது திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். அப்போது அதிமுகவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியனா அதிமுக, திமுக, அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் போட்டியிடுவதால் கூட்டுறவு சங்கத் தேர்தல் சூடுபிடிக்கவே செய்துள்ளது.
இந்த விவகாரம் கும்பகோணம் பகுதிகளில் மட்டுமின்றி நாகை திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் முழுவதுமே எழுந்துள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகளை ஆளுங்கட்சியான அதிமுகவின் அமைச்சர்களின் உத்தரவின் பேரில், விடியற்காலையிலேயே வரவழைத்து, அதே இடத்திற்கு போட்டியிடும் அதிமுகவினரையும் ஒரே இடத்துக்கு ரகசியமாக வரவழைத்து வேட்பு மனுக்கள் வழங்கியுள்ளனர். கடந்த முறை நடந்த தேர்தல் போலவே நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் அதிமுகவினர். அது ஒருபோதும் நடக்கவிடமாட்டோம், என போராட்டத்தில் குதித்துவிட்டனர். திமுக அ,ம,மு,க உள்ளிட்ட கட்சியினர்.