
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சிபாரிசு மூலமாக அந்தப் பதவிக்கு வந்துள்ளார். இந்நிலையில் தெற்கு மாவட்டம் முழுவதும் பயணம் செய்து, இளைஞர் - இளம்பெண் பாசறைக்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்து வருகிறார்.
ஆகஸ்ட் 29 -ஆம் தேதி திருவண்ணாமலை நகரத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினார். இதில் நகரத்தில் தன் பலத்தைக் காட்டும் விதமாக அ.தி.மு.க கொடிகளை சாலை முழுவதும் கட்டி பந்தா செய்யவைத்தார். உறுப்பினர் சேர்க்கைக்காக 2 -ஆவது வார்டுக்குச் சென்றவர் அங்கு பேசிய பேச்சு, வீடியோவாக பரவியது, கேட்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அங்கு அவர் பேசியது, “அ.தி.மு.க இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. நகரச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என சொல்கிறார்கள். அ.தி.மு.க-வின் சாதாரண தொண்டன் ஒரு வேட்டி கட்டிக்கொண்டு வருபவன் ஒரு தகவலை சொன்னால், மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தாலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தாலும், நகராட்சி ஆணையாரளாக இருந்தாலும், பொறியாளராக இருந்தாலும் சொல்வதைச் செய்ய வேண்டும் என்பது முதலமைச்சர் உத்தரவு. அதிகாரிகள், இயக்கத்தின் நண்பர்களை மதிக்கவேண்டும், இந்த நகர கழக நிர்வாகிகளை மதிக்க வேண்டும். பொதுமக்கள் சார்பில் சொல்லப்படும் எந்த கோரிக்கையாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு செய்து தரவேண்டும் என்பது மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவு. உத்தரவுக்கு கட்டுப்படாத எந்த அதிகாரியும் இந்த மாவட்டத்தில் பணியாற்ற முடியாது என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்” எனப் பேசியது வீடியோவாக பரவ இது அதிகாரிகளையும், அரசு ஊழியர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுபற்றி கட்சி பிரமுகர்கள் சிலர் நம்மிடம், அவரோட வழக்கமான ஸ்டைலே இதுதான். கலசப்பாக்கம் ஒன்றியச் சேர்மனாக இருந்தபோதிலிருந்தே அவர் அதிகாரிகளை மதிப்பதில்லை. கடந்த முறை அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு ஊழியர்களை அவர் அவமானப்படுத்தி பேச, அரசு உழியர்கள் போராட்டம் செய்தனர். தற்போது மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்த சில தினங்களில் செங்கம் பகுதிக்குச் சென்றிருந்தபோது, “அதிகாரிங்க நாங்க சொல்றதை செய்யறதேயில்லை அண்ணா” எனக் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகி ஒருவர் புகார் கூறியுள்ளார். உடனடியாகச் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிக்கு அவர் முன்பே ஃபோன் செய்த மாவட்டச் செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, “என்ன எங்க கட்சிக்காரன் சொல்றதை செய்யமாட்டிங்கறிங்களாம், என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க மனசுல” என எகிறியுள்ளார். அதேபோல் மாவட்டச் செயலாளர் பதவியில் நியமனம் செய்யப்பட்ட மறுநாள், ஊரக வளர்ச்சி துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவருக்கு ஃபோன் செய்தவர், எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் என்னோட கமிஷன் எனக்கு வந்து சேரனும் எனக்கேட்டதாகக் கூறப்படுகிறது.
இப்போது வெளிப்படையாக கட்சிக்காரன் சொல்ற வேலையை செய்யலன்னா, தூக்கியடிச்சிடுவோம் என மிரட்டியிருப்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளது.