அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ''ஜனநாயக சுதந்திர நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்ற ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலிருந்த நிலைமாறி முழுவதுமாக ஆளும் கட்சி எதிர்க் கட்சியாக நின்று ஒரு தேர்தலைச் சந்தித்தது என்றால் அது இந்த தேர்தலாகத்தான் இருக்கும். ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், ஆட்சி அதிகாரத்தில் திமுக மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி உள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உள்ளது. சட்டப்பேரவையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உள்ளது. மாநகராட்சி, மாவட்டத்திலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிலைநிறுத்தி முதல்வரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். சென்னையைச் சிங்காரச் சென்னையாக ஆக்குகின்ற முயற்சி. எழில்மிகு சென்னை 2.0 என கொண்டு வருகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்போம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'திருமணம் தாண்டிய உறவை ஆதரிக்கும் ஆட்சி என்பதால் தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள்''என எச்.ராஜா கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு,
''அவரே ரொம்ப நாளா காணோம். இருக்கேன்னு காட்டிக்கொள்வதற்காக ஏதாவது சொல்லி இருப்பார். தாலிக்கு தங்கம் என்பது திருமணம் செய்யும்போது கிடைக்க வேண்டிய பொருள். தற்போது நிலுவையில் இருக்கின்ற மனுக்களை அளவை எடுத்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேபோல் அதில் நடந்த தவறுகளையும் சட்டமன்றத்தில் விலாவாரியாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதேபோல் அதன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் விலாவாரியாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு பொருளாதார நிலை உயர்ந்தால் தான் திருமணத்திற்கு உண்டான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களுக்குக் கல்வியை, அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி தடையாக உள்ள பொருளாதாரத்தை அரசு சார்பில் உயர்த்தி முன்னேற்றி அவர்களே சொந்தக்காலில் சுயமாக சம்பாதித்த பணத்தில் திருமணம் செய்துகொள்வது வரவேற்கப்படுவதா... அல்லது பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கின்ற இந்த திட்டத்தை ஆதரிப்பதா?''என்றார்.