பா.ம.க.வுக்கு தி.மு.கவின் கதவு அடைக்கப்பட்டுவிட்டதால், “டாக்டர் ராமதாஸின் பேர அரசியலுக்குத் துணை போக வேண்டாம்” என்று தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் தங்கள் தலைமையை அறிவுறுத்தியுள்ளனர்.
2019 நாடாளுமன்ற தேர்தலோடு 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அதில் வட தமிழகத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் இருந்ததால் தான் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, நாம் பா.ம.க.வின் பேர அரசியலுக்கு சரண் அடைந்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததோடு மட்டுமின்றி வட தமிழகத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 7 -ஐ தி.மு.க விடம் பறிகொடுத்துவிட்டு, 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றோம்.
அதிலும் சோளிங்கரில் நம் கட்சி மட்டுமே வன்னியர் வேட்பாளரை நிறுத்தியதால் வெற்றி பெற்றோம். அதேசமயம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டியில் நாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால், தர்மபுரி பாராளுமன்றத்திற்கு போட்டியிட்ட டாக்டர் அன்புமணியை விட இந்த இரண்டு தொகுதியிலும் தி.மு.க வேட்பாளருக்கே அதிக வாக்குகள் கிடைத்தது.
எனவே, பா.ம.க.வால் நமக்கு இழப்புதான். அவர்களுக்கு முன்பு போல, வன்னியர் மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை. அவர்கள் நடத்திய விரும்பத்தகாத போராட்டத்தால் மாற்றுச் சமூகத்தினரும் நமக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.
பா.ம.கவை விட தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் கட்சி அமைப்பு வலுவாக வைத்துள்ள தே.மு.தி.க.வை இணைத்துக் கொண்டு, பா.ம.கவுக்கு கொடுக்கும் சீட்டில் பாதியை சேர்த்துக் கொடுத்தால் அவர்கள் திருப்பதியாக வேலை செய்வார்கள்.
தி.மு.க., பா.ம.க.வுக்கு கதவை இழுத்து மூடிவிட்டதால் நாம் அவர்களைப் பார்த்து அச்சப்பட வேண்டாம். வன்னியச் சமுதாயத்திற்கு நாம் செய்த கோரிக்கைகளைச் சொல்லியே வன்னியர்களின் வாக்குகளைப் பெற்று விடலாம்” என்று எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர்.