Skip to main content

காதல் பிரச்சனையில் கரோனாவால் சிறைக்கு சென்ற அதிமுக பிரமுகர்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

திருச்சி மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்தவர் வணக்கம் சோமு. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர், மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியை ஒருவரை, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 தேதி நண்பர்களுடன் ஆம்புலன்ஸில் கடத்தியுள்ளார். கடத்தல் தகவலை அறிந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். திருச்சி - திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே அந்தப் பெண்ணை சாலையோரம் இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பியது.
 

admk



இந்த வழக்கில் வணக்கம் சோமுவின் கூட்டாளிகளான தஞ்சையைச் சேர்ந்த அலெக்ஸ், விக்னேஸ்வரன், ஞானபிரகாஷம், ஜெயபால், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு, தலைமறைவாகவே இருந்தார். ஒரு தலைக்காதலால் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது, மேலும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்  இருந்தும் நீக்கியது.

ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்தும் அவை தள்ளுபடி ஆகிக்கொண்டே இருந்தன. இந்த நிலையில், 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, கடந்த 6 மாதங்களாக கேரளா, பெங்களுர் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருந்த சோமுவை பிடிக்க பல்வேறு முயற்சி செய்தும் அதிலிருந்து தப்பியோடினார். அவருக்கு அரசியல்வாதிகள் துணையாக இருந்ததால் இது நாள்வரை தலைமறைவாக இருந்தார்.

நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், வெளியிடங்களில் தலைமறைவாக இருக்க முடியவில்லை, ஓட்டல்களில் அறை எடுத்தும் தங்க முடியாத நிலை ஏற்பட்டதால், இனி பதுங்க முடியாது என்று முடிவு செய்து சரண் அடைந்தார். விசாரணைக் கைதிகள் பலருக்கும் கரோனா அச்சத்தால் ஜாமீன் வழங்கப்படும் நிலையில், தற்போது சரணடைந்தால், சிறை செல்ல வேண்டியதில்லை என்று நினைத்து சரண் அடைந்துள்ளார். வணக்கம் சோமுவை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவரை ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்பார்க்காத வணக்கம் சோமு அதிர்ச்சி அடைந்தார் என்றனர்.

கேரளா, பெங்களுர் என்று சுற்றித்திரிந்தவர் என்பதால் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனோ பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முடிந்தவுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

- ஜெ. தாவீதுராஜா 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.