அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, இன்று (15.12.2024) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், ‘அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தர வேண்டும். அதன்படி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.