திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் துவாக்குடி அண்ணா வளைவில் மே தின பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்.பி ப.குமார் மற்றும் கழக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்டச் செயலாளர் குமார், “திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் பல்வேறு பிரச்சனைகள் தீர்ந்து விடும் என கூறினார்கள். ஆனால் இரண்டு மாதத்தில் இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வர் ஆகிவிட்டார் என்று அவர்களே தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. அடுத்த இடத்தில் ஆந்திராவும் அதற்காக அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளது. தொகுதி அமைச்சர் என்பவர் தனது தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் இவர் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவராகவே செயல்பட்டு வருகிறார். திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் ரூ.600 கோடியில் ஐ.டி பார்க்க அமைய இருந்ததை நேரு தனது தொகுதியில் உள்ள பஞ்சபூருக்கு தட்டிச் சென்று விட்டார்.
நவல்பட்டு அண்ணா நகரில் ஏற்கனவே உள்ள டைடல் பார்க்கை விரிவுபடுத்த இவர்களுக்கு முடியவில்லை. கடந்த இரண்டு வருடமாக இந்த தொகுதிக்கு எந்தவித திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் பெல் நிறுவனத்திற்கு அதிகப்படியான ஆர்டர்களை பெற்று தருவதாகக் கூறினார்கள். ஆனால், தற்போது வரை எந்தவித ஆர்டரும் பெற்றுத் தரவில்லை” என்றார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.