புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவில் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடும் அதிருப்திகள் நிலவியது. அறந்தாங்கி, ஆலங்குடி தொகுதிகளில் பலகட்டமாக போராட்டங்கள் நடந்தது. இதில் ஆலங்குடி தொகுதியில் 49 நாட்களுக்கு முன்பு கட்சிக்கு வந்த காங்கிரஸ் பிரமுகருக்கு வழங்கிய சீட்டை திருப்ப பெறக் கோரி 16ந் தேதி எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரைக்கு வந்த அன்று அவரது வாகனத்தை மறித்து மனு கொடுக்க காத்திருந்ததை பார்த்து வாகனத்தை நிறுத்தாமல் சென்றார் எடப்பாடி. அதற்காக சாலை மறியல் வரை செய்ததால் கொத்தமங்கலம் பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான், கட்சியின் சீனியர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் சீட்டுக் கொடுக்காமல் தவிர்த்து வரும் அதிமுக மா.செ. அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோற்கடிக்க வேண்டும் என்று கூறி விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் (ஆலங்குடி தொகுதி) தனது மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து தலைமைக்கு கடிதமும் அனுப்பி இருந்தார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதால்தான் கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தல்களில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று ஜெ விடம் எழுதிக் கொடுத்தார்கள். அதே போல தான் தற்போதும் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யாததாலும் பல தொகுதிகளை அதிமுக இழக்கும். அதன் பிறகு கட்சியை தான் கைப்பற நினைக்கிறார் என்று கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.
விராலிமலை தொகுதியில் அதிமுக-திமுக இரு அணிகளும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் யார் முந்தினாலும் சில நூறு ஓட்டுகளே வித்தியாசம் வரலாம் என்பதால் இரு வேட்பாளர்களும் இரவு பகலாக சோறு தண்ணீர் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தனக்கு எதிராக தன் கட்சி பிரமுகரே போட்டிக்கு வந்தால் போட்டி வேட்பாளர் சார்ந்துள்ள முத்தரையர் வாக்குகள் சிதறினால் வெற்றி பாதிக்குமே என்ற நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார், மேலும் தானும் போனில் பேசி தனது அரசியல் சாதுரியத்தால் அமைச்சரை வீழ்த்தாமல் வரமாட்டேன் என்று சொன்ன நெவளிநாதனை வீழ்த்தி உங்கள் ராஜினாமா ஏற்கப்படாது.. மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவி வழங்க சொல்லி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பரிந்துரை கடிதம் எழுதிவிட்டேன். அதன் நகல் இந்தா இருக்கு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கையெழுத்திட்ட பரிந்துரை கடிதத்தை உடனே கிடைக்கச் செய்தார்.
அடுத்த சில மணி நேரத்தில் அமைச்சரை வீழ்த்த தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். சமுதாய உணர்வோடு வேட்பு மனு தாக்கல் செய்தேன் என்று சொல்லும் போது மஞ்சள் சட்டையுடன் போனவர் சத்தமில்லாமல் வாபஸ் பெற சென்ற போது சமாதான புறாவாக வெள்ளை சட்டையில் சென்று மனுவை திரும்ப பெற்றுள்ளார். தனது வெற்றியை பாதிக்கும் என்பதை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த ஒருவருக்கு மாநில பதவி வழங்க பரிந்துரை செய்திருப்பது மற்றவர்களை சங்கடப்பட வைத்துள்ளது.