சமீபத்தில் கொலையுதிர் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது பேசிய அவர், நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார். இந்த கருத்துக்கு சினிமா துறையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்பு திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவில் நீக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்பு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜகவினர் போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, பாஜகவில் இணைந்ததன் மூலம் நான் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பேசினார். மேலும் பாஜகவில் சேருவதற்கு பல நடிகர்கள் தயாராக உள்ளதாகவும், இது குறித்து நடிகர் கார்த்திக்கிடம் தான் பேசியதாகவும் ராதாரவி கூறினார். இதனால் நடிகர் கார்த்திக் பாஜகவில் வெகு விரைவில் இணைவார் என்று பாஜகவினர் பேசி வருகின்றனர்.