டெல்லியில் சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் வெர்ஷா என்ற பெயர் கொண்ட ஐடியில் பெண் ஒருவர் பேசி பழகியுள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துக்கொண்டு பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெர்ஷா தனக்கு பிறந்தநாள் என்று தன்னுடன் டின்டர் ஆப்பில் பழகி வந்த போட்டித்தேர்வாளரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் வாழ்த்து தெரிவிக்க, இருவரும் சந்தித்து பிறந்த நாள் கொண்டாடலாம் என்று காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளரும் சம்மதம் தெரிவிக்க, விகாஸ் மார்க்கில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் இருவரும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அப்போது, வெர்ஷாவிற்கு போட்டித்தேர்வாளர் ஸ்நாக்ஸ், ஆல்கஹால் சேர்க்காத பானங்களை ஆர்டர் செய்துள்ளார். இதன் மதிப்பு சில ஆயிரங்கள் தான் இருக்கும். ஆர்டர் செய்த உணவு டேபிளுக்கு வர இருவரும் பேசிக்கொண்டு உணவருந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது, திடீரென வெர்ஷா தனது குடும்பத்தில் பிரச்சனை என்று கூறி டேட்டை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். உடனே, அவசரம் என்பதால் வெர்ஷாவை அனுப்பி வைத்த போட்டித்தேர்வாளர் கஃபேவில் பில் செலுத்த சென்றுள்ளார்.
அப்போது, 1.2 லட்சத்திற்கான பில்லை பிளாக் மிரர் கஃபே நிர்வாகத்தினர் கொடுத்ததைப் பார்த்து அதிர்ந்துபோனவர் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், கஃபே நிர்வாகத்தினர் பணத்தை செலுத்தாமல் இங்கிருந்து நகர கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்துபோனவர் வேறுவழியின்றி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில்தான் மிகப்பெரிய மோசடி பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவம் நடைபெற்ற பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் சேர்ந்து நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட போட்டித்தேர்வாளரிடம் டிண்டர் ஆப் மூலம் டேட் செய்த வெர்ஷா என்ற பெண்ணும் இவர்களின் கூட்டாளி என்பதை போலீசார் கண்டறிந்தனர். பிளாக் மிரர் கஃபேவில் மேலாளராகப் பணிபுரியும் ஆர்யன் என்பவர் வெர்ஷாவை, டிண்டர் செயலி மூலம் போலியான கணக்கை உருவாக்கி சிவில் தேர்விற்கு படித்து வந்த போட்டி தேர்வாளரை மோசடி வலையில் வீழ்த்தி பணத்தை ஏமாற்றியுள்ளார். அதுபோல, வெர்ஷாவின் உண்மையான பெயர் அஃப்சான் பர்வீன் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
இந்த மோசடி கும்பலானது டிண்டர் ஆப் மூலம் இளைஞர்களை டேட்டிங் வரவழைத்து மோசடி செய்து வந்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை வெர்ஷாவிற்கு15 சதவிகிதமும், உதவும் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் 45 சதவிகிதமும், மீதமுள்ள 40 சதவிகிதம் கஃபே உரிமையாளர்களுக்கும் பிரித்துக்கொண்டு ஏமாற்றியது போலீஸ் விசராணையில் தெரியவர போலீசார் மோசடியில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். ஆனால், வெர்ஷா தப்பித்த நிலையில், போலீசார் அவரை தீவிரமாக் தேடினர். அவர், ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.