மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமும் மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் பல்வேறு மாநில ஆளுநர்கள் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்தித்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநில ஆளுநர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக, மார்ச்சிஸ்ட கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட நான்கு கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை கூட்டம் இன்று மாலை கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது. அதில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ஆளுநர் கேசரிநாத் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை செய்கிறார். இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.