1932 ஆம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ் 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின்னர் 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடைமையாக்கப்பட்டது. இதன்பின்னர் கடந்த சில வருடங்களாக ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் டாடா நிறுவனம் 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை ஏலம் எடுத்துள்ளது.
இதன்மூலம் 68 ஆண்டுகளுக்குப் பின்னர் டாடா நிறுவனம் மீண்டும் ஏர் இந்தியாவின் உரிமையாளராகியுள்ளது. இதனையடுத்து ரத்தன் டாடா, ஏர் இந்தியாவை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; ஏர் இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தில் டாடா குழுமம் வெற்றி பெற்றது சிறப்பான செய்தி! ஏர் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப பெரிய அளவிலான முயற்சிகள் தேவைப்படும் என்றாலும், விமான துறையில் டாடா குழுமம் இருப்பதற்கு வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும் என நம்புகிறேன்.
திரு ஜெஆர்டி டாடாவின் தலைமையில் ஏர் இந்தியா, ஒரு காலத்தில், உலகின் மிகவும் மதிப்புமிக்க விமான நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ் பெற்றிருந்தது. ஆரம்ப காலத்தில் அது அனுபவித்த கவுரவத்தையும், நற்பெயரையும் மீண்டும் அதற்குப் பெற்றுத்தரும் வாய்ப்பை டாடாக்கள் பெறுவார். திரு ஜேஆர்டி டாடா இன்று நம்மிடையே இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களைத் தனியார் துறைக்கு விற்கும் அரசாங்கத்தின் அண்மைக்கால கொள்கையை நாம் அங்கீகரித்து நன்றி தெரிவிக்க வேண்டும். மீண்டும் வருக, ஏர் இந்தியா!
இவ்வாறு ரத்தன் டாடா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.