உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வருந்தத்தை தருகிறது. சோஷலிஸ போராளிகளான ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரால் அரசியலில் ஈர்க்கப்பட்ட அவர், பின்னாளில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்களால் அரசியலில் வார்த்தெடுக்கப்பட்டார். எமர்ஜென்ஸி நெருக்கடியை எதிர்த்து 19 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த போது, உ.பி மாநில அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவானார்.
முன்னாள் பிரதமர் V.P.சிங் தலைமையில் ஜனதா தளம் எழுச்சி பெற்ற போது வீசிய அரசியல் அலையில், 1989ஆம் ஆண்டு உ.பி. மாநில முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற தருணம் அயோத்தி பாபர் மஸ்ஜித் விவகாரம் மதவாத சக்திகளால் கொந்தளிப்பான நிலைக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது. அக்கால கட்டத்தில் அந்த வளாகத்தை சட்டப்படி பாதுகாக்க அவர் எடுத்துக் கொண்ட நிர்வாக நடவடிக்கைகள் துணிச்சல் மிக்கவையாக இருந்தது. அம்மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டிற்காகவும், அவர்களின் மேம்பாடுகளுக்காகவும் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை.
ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் ஜனதா தளத்தின் பிரதமர்களாக தேவகெளடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக இருந்த போது, ஒன்றியத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக அவர் இருந்தார். அப்போது அவர் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காலம் முழுக்க நினைவு கூறப்படும் என்பதில் ஐயமில்லை. அந்த துறையின் ஆகச் சிறந்த அமைச்சராக அவர் இருந்தார் என்பது அவரது நிர்வாக ஆற்றலை உணர்த்துகிறது. சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் உறுதியாக களமாடிய அவரது மறைவு, வட இந்திய அரசியலுக்கு பேரிழப்பாகும்.
முலாயம் சிங் யாதவ் போன்ற தலைவர்களின் பங்களிப்புகள் அதிகமாக தேவைப்படும் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரை நாடு இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், சோஷலிஸ தோழர்களுக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கும், உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.