
நேபாளம், பூட்டான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், "இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள குடிமக்கள் விசா இன்றி பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்திய பயணிகளுக்கு ஈரான், இந்தோனேசியா, மியன்மார் உள்ளிட்ட 43 நாடுகள் வருகையின்போது விசா (On Arrival) பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குவதாகவும் இலங்கை, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இந்தியப் பயணிகளுக்கு இ-விசா வசதியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.