தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. தேர்தலில் தெலுங்கானா காங்கிரசாரை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய கமிட்டிகளை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
பிரசார கமிட்டி தலைவராக மல்லுப்பட்டி விக்ரமர்கா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரச்சாரத்தல் ஈடுபடுவோர் பட்டியலையும் ராகுல் அறிவித்துள்ளார்.
நடிகை விஜயசாந்திக்கு பிரசாரத்தில் முக்கியத்துவம் அளிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளார். விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல் தேர்தல் களத்தில் அனுபவமும் உள்ளவரான விஜயசாந்தியை நட்சத்திர பேச்சாளராக நியமித்ததால் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தெலங்கானா மாநில முதல் முதலமைச்சராக இருந்த சந்திரசேகராவ் கட்சியான ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்தவர் விஜயசாந்தி. ஆந்திராவின் மெதக் தொகுதி எம்.பி.யாக இருந்தார். சந்திரசேகரராவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2014ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் விஜயசாந்தி. சந்திரசேகராவ் கட்சியை எதிர்கொள்ள அவரது கட்சியில் இருந்த விஜயசாந்தியே சரியான தேர்வு என்று கட்சியினரிடம் கூறியிருக்கிறார் ராகுல்.