ஒரு ஃபேன், லைட் மட்டுமே உள்ள ஒரு வீட்டிற்கு 128 கோடி ரூபாய் மின்கட்டணம் விதித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் பகுதியில் ஷமிம் என்ற முதியவர் தனது மனைவியுடன் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் ஷமீமுக்கு மாபெரும் அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது அம்மாநில மின்வாரியம்.
ஒரு லைட் மற்றும் ஒரு ஃபேன் மட்டுமே உள்ள அவரது வீட்டிற்கு ரூ.128,45,95,444 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த முதியவர், மின்துறை அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்களோ, எதுவும் செய்ய முடியாது, இந்த தொகையை செலுத்தியே ஆக வேண்டும் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஷமீம், "மின்சார பில்லில் பிழை இருப்பதாகவும், அதனை சரி செய்ய மின்சாரத் துறையை அணுகினேன். ஆனால் அவர்கள் பில்லில் உள்ள தொகையை கட்ட வேண்டும் என சொல்கின்றனர். எங்கள் கோரிக்கைக்கு யாரும் செவிசாய்ப்பதில்லை, அவ்வளவு பெரிய தொகையை நாங்கள் எப்படி கொடுப்போம்?. வீட்டில் ஒரு ஃபேன் மற்றும் லைட் தவிர எதுவும் பயன்படுத்தப்படுவது இல்லை. மேலும் 128 கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தவில்லை என கூறி வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பையும் துண்டித்துவிட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் தரப்பில் இது குறித்து கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு ஏற்பட்டிருக்கும், பில்லை கொண்டுவந்து அவர் சரி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.