தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு சூரல்மலா வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் பெரும் தாக்கத்தை வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மட்டுமல்லாமல் கேரளாவின் பல இடங்களிலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரளாவில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் கடுமையான வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லும் நிலையில் கார் ஒன்று அபாயகரமான வெள்ளப்பெருக்கு நடுவே செல்லும் அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. மனைவிக்கு ஏற்பட்ட பிரசவ வலி காரணமாக கணவன் தன்னுடைய உயிரை பணயம் வைத்து வெள்ளத்தை கடந்து செல்லும் இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.