ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024) யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனையடுத்து போட்டித் தேர்வர்கள் கடந்த 6 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணி தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மே 26 அன்று நடக்க இருந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.