நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதில் பாஜக கட்சி மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் 57 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பட்ஜெட் குறித்து இணையதளம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மத்திய பட்ஜெட் 2019-2020 குறித்து கருத்துக்களை தெரிவிக்க இணையதள முகவரி: https://www.mygov.in/ சென்று முதலில் நிரந்தர பதிவை (REGISTER) உருவாக்க வேண்டும். அதற்கு பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை கட்டாயம் குறிப்பிட்டு "LOG ID" உருவாக்க வேண்டும். அதன் பிறகு "LOG IN" செய்வதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை குறிப்பிட்டால், அந்த எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும்.
அதில் ரகசிய குறியீடு எண் இடம் பெற்றிருக்கும். அதை "LOG ID" யில் பதிவு செய்தால் போதும். உங்களின் கணக்கு "OPEN" ஆகும். அதில் மத்திய பட்ஜெட் 2019 என்ற 'OPTIONS' இடம் பெற்றிருக்கும். அதனை கிளிக் செய்து 'COMMAND' பகுதியில் பட்ஜெட் குறித்த கருத்துக்களை மக்கள் அனைவரும் எளிதாக தெரிவிக்கலாம். அதே போல் மத்திய அரசு திட்டங்கள் சம்மந்தமான அனைத்து கருத்துக்களையும் இதே இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் குறித்த கருத்துக்களை தெரிவிக்க கடைசி நாள் ஜூன் 20 ஆம் தேதி ஆகும்.