ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டம்’ எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை ‘பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா’ எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை ‘பாரதிய சாக்சியா’ எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா மீண்டும் தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘உங்களது அரசாங்கம் இந்த மூன்று முக்கியமான மசோதாக்களை ஒருதலைபட்சமாகவும், எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றியது. அன்று, கிட்டத்தட்ட 100 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இரு அவைகளின் மொத்தம் 146 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜனநாயகத்தின் அந்த இருண்ட நேரத்தில் எதேச்சதிகாரமான முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தேதியை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மொழியப்பட்டதை முழுமையாக ஆராய வாய்ப்பளிக்கும். மேலும், குற்றவியல் சட்டங்களை மீண்டும் நாடாளுமனறத்தில் மறு ஆய்வு செய்ய உதவும். எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.