![TN govt has requested to hear the Cauvery case as an urgent case Supreme Court](http://image.nakkheeran.in/cdn/farfuture/DZH0rLw5j6hkiwnFJPqXVwYlZkV-4eJDfeTYWJyYhr4/1692338194/sites/default/files/inline-images/994_245.jpg)
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது, 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்குத் திறந்துவிட்டு வருகிறது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழகத்திற்குக் காவிரியிலிருந்து 15 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடி திறந்துவிடும் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கர்நாடகத்தில் கடும் வறட்சி பஞ்சம் நிலவுவதால், தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரைக் கர்நாடகா மாநிலம் திறந்து விட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.