ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ் மற்றும் வி.எம்.ஆர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 252 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், அதிமுகவிற்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாது என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதேபோல ஆந்திரா, கேரளா, ஆகிய மாநிலங்களிலும் பாஜக இரு இடங்களில் கூட வெற்றிபெற வாய்ப்பில்லை என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகள் கொண்ட மாநிலமான உ.பியில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஏபிபி, சி-வோட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்துகணிப்பிலும் திமுக கூட்டணிதான் 39 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவித்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த கருத்து கணிப்பிலும் அதிமுக 4 தொகுதிகளில்தான் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெளியாகும் இதுபோன்ற கருத்து கணிப்புகளால் அதிமுக அதிர்ச்சியில் உள்ளது.