இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமரும், மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தநிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றவர்களுக்கு வெறிநாய் கடிக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சமூக சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டதும் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த அவர்கள், ‘ஆதார் கார்டை சமர்ப்பிக்க வேண்டுமா’ என கேட்டுள்ளனர். அப்போது தடுப்பூசி செலுத்திய மருந்தாளர் (pharmacist), ‘ஆதார் அட்டை தேவையில்லை. இது வெறிநாய் கடிக்கான தடுப்பூசி’ என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், கரோனா தடுப்பூசி போடுமிடத்திற்குச் செல்லாமல், வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்குச் சென்றது தெரியவந்தது. அதுநேரத்தில், அங்கு பணிபுரியும் மருந்தாளர், வேறொரு தனியார் மருந்தாளர் ஒருவரை அங்கு பணியில் அமர்த்திவிட்டு, வேறு ஒரு வேலைக்காக வெளியில் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தின் விளைவாக ஒரு மருந்தாளர் இடைநீக்கமும், மற்றொரு மருந்தாளர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். சமூக சுகாதார மையத்தின் மேற்பார்வையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.