காட்டில் மன்னர் காலத்து புதையல் இருப்பதாக ஒரு சாமியார் கூறியதை நம்பி காட்டிற்குள் சென்று உணவு, தண்ணீர் இல்லாம வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக பணிபுரிந்த கட்டா சிவக்குமார் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணாநாயக். இவர்கள் இருவருக்கும் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு சாமியாரின் நட்பு கிடைத்துள்ளது. அந்த சாமியார் இவர்கள் இருவரிடமும், காட்டுப்பகுதியில் உள்ள பெரிய மலைக்குன்றில் மன்னர் காலத்து புதையல் இருப்பதாகவும், அது இருக்கும் இடம் தனக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி சிவக்குமார், கிருஷ்ணாநாயக் தங்களது குடும்பத்தினரிடம் சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சாமியாருடன் கடந்த 12-ந்தேதி காட்டுக்குள் சென்றனர். 2 நாட்கள் தொடர்ந்து நடந்து காட்டின் அடர்ந்த பகுதிக்குள் சென்று விட்டனர். அவர்களிடம் இருந்த உணவு, நீர் ஆகியவை தீர்ந்த நிலையில் புதையல் கிடைக்கவே இல்லை. இதனையடுத்து உணவு தேட மூவரும் பிரிந்த நிலையில், ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாத நிலைக்கு சென்றுவிட்டனர்.
இதில் வங்கி ஊழியர் சிவகுமாரின் நண்பரான கிருஷ்ணாநாயக் ஒரு கிராமத்தை அடைந்துள்ளார். இதற்கு மேல் குடும்பத்திடம் உண்மையை மறைக்க கூடாது என நினைத்த அவர், சிவகுமாரின் மனைவியிடம் தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பிறகு சிவகுமாரை தேடி காட்டிற்குள் சென்ற காவல் துறையினர், இரண்டு நாள் தேடுதலுக்கு பின்னர் அவரை பிணமாக மீட்டுள்ளனர்.
காட்டில், உணவு, நீர் இல்லாமல் வெயில் தங்க முடியாமல் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சாமியாரின் பேச்சைக்கேட்டு காட்டுக்குள் சென்று வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காட்டுக்குள் சென்ற சாமியாரையும் காணாததால் அவரை தேடும் பணியும் நடந்து வருகிறது.