நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று முன்தினம் (17/06/2019) நாடாளுமன்றம் கூடியது. மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார். முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 311 உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இரண்டாவது நாளான நேற்று மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்று கொண்டனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியும், அவரைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மேனகா காந்தியும் எம்.பி. பதவி ஏற்றுக்கொண்டனர். பின்பு சோனியா காந்தி மற்றும் மேனகா காந்தி இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் மக்களவை நேற்று கலகலப்புடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டது.
அதே போல் தமிழகத்தில் இருந்து மக்களவை உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இரண்டாவது நாளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் 'தமிழ் வாழ்க' என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது. பதவியேற்பு நிகழ்வின் போது தமிழக எம்பிகளுக்கு பாஜக உட்பட மற்ற கட்சி உறுப்பினர்களும் கரவொலி, கைதட்டல் என தமிழக எம்பிக்களுக்கு ஆரவாரம் செய்தனர். தமிழக எம்பிக்கள் குரலால் நாடாளுமன்றம் அதிர்ந்தது என்றே கூறலாம்.