ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா என்ற பகுதியில் உள்ள கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சில வட மாநிலங்களில் இரு தரப்புகளுக்கு இடையே மோதல் உண்டாகி ராம நவமி கொண்டாட்டம் வன்முறையில் முடிந்ததால் பதற்றம் உண்டானது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 'ராம நவமி ஷோபா யாத்திரை'யின் போது மோதல் வெடித்துள்ளது. ஃபதேபூர் சாலை பகுதியில் உள்ள பஞ்ச்ரிகர் மொஹல்லாவில் நடந்த இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் உண்டானது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலத்தில் நடந்த மோதலில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இச்சம்பவத்திற்கு முன் விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு ஊர்வலம் ஃபதேபுரா பகுதியில் நடந்தது. இந்த ஊர்வலத்தின் மோதும் மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் காவல்துறையினர் வன்முறை பெரிதாக உருவாகாத வண்ணம் நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.