
மத்திய திட்டக்குழுவிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது நிதி ஆயோக். இந்த அமைப்பு வருடந்தோறும் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு பட்டியலை வெளியிட்டு வருகிறது. சமூக, பொருளாதார, சுற்றுசூழல் காரணிகளை கொண்டு மாநிலங்களின் நிலையான வளர்ச்சி கணக்கிடப்படும். இந்தநிலையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பட்டியலை தற்போது நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கேரளா 75 புள்ளிகளோடு முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் 74 புள்ளிகளோடு இரண்டாமிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பட்டியலின் கடைசி இடத்தில் பீகார் உள்ளது. அந்த மாநிலம் வெறும் 52 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு கடந்த வருடம் 60 ஆக இருந்த நிலையில், தற்போது 66 ஆக உயர்ந்துள்ளது. சுத்தமான நீர், சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இது சாத்தியமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.