உத்தர பிரதேசம் மாநிலம் படான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரஹாஸ். இவர் உத்தரபிரதேச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘ரூ.12 லட்சம் இழப்பீடை வழங்கி எனது நிலம் அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், அந்த இடத்தை போலி ஆவணங்கள் கொண்டு தயாரித்து மோசடி செய்து அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கை துணை மண்டல மாஜிஸ்திரேட் வினீத் குமார் விசாரித்தார். அந்த விசாரணையில், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலையும் சேர்த்து அவருக்கு சம்மன் அனுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக ஆளுநர், நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் மாவட்ட நீதிபதி மனோஜ் குமாருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில்,’அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு நோட்டீஸோ அல்லது சம்மனோ அனுப்ப முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, துணை மண்டல் மாஜிஸ்திரேட் வினீத் குமாரை மாவட்ட நீதிபதி மனோஜ் குமார் நேற்று (02-11-23) இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.