நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. இதனையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு அடுத்த பின்னடைவாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, வருகிற மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை” என்று கூறினார்.