தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது என 30 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுண்ணாம்பு பாறைகளால் ஆன பாலம் போன்ற அமைப்பை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் பதிலளிப்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ராமர் பாலம் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசின் விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் கேள்வி எழுப்பியபோது, "இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது எனத் துல்லியமாகக் கூற முடியவில்லை. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்ததில் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே சுண்ணாம்புக்கல் திட்டுக்கள் இருக்கிறது. சுண்ணாம்புக்கல் திட்டுக்களைச் சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, மிச்ச சொச்சம் என்றோ கூற முடியாது" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.