டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் பகுதியில் ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தரைதளத்தை நூலகமாகப் பயிற்சி மைய நிர்வாகம் உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம்(27.7.2024) பெய்த கன மழையின் காரணமாக ராவ் பயிற்சி மையத்தின் தரை தளத்திற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்துள்ளது. அப்போது தரை தளத்தில் உள்ள நூலகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த பயிற்சி மாணவர்கள் வெள்ள நீரில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மாணவர்களை மீட்டனர். பின்பு, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். நீண்ட நேரம் தொடர்ந்த இந்த மீட்பு பணியில், சோனி(25), ஸ்ரேயா யாதவ்(25), நெவீன் தல்வின் என 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் டெல்லி மாநகராட்சி, ராவ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் பொருட்களைச் சேமிப்பு அல்லது கார் வாகன நிறுத்துமிடமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி கொடுத்திருந்த நிலையில் சட்ட விரோதமாக நூலகத்தை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, ராவ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தரைத்தளத்தில் இயங்கிவந்த 11 பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு நீதிகேட்டு தீவிர போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இன்றும் சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தின் முன்பு, “வழக்குப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் பிரதி வழங்கப்பட வேண்டும்; சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தின் உரிமையாளருக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்; வெளிப்படையான விசாரணை வேண்டும்.” என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.