தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவையான நிலையில் எந்தக்கட்சிக்கும் அதிகப்படியான இடங்கள் கிடைக்கவில்லை.
ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 55 வார்டுகளிலும், பா.ஜ.க. 48 வார்டுகளிலும், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். 44 வார்டுகளிலும், வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநகராட்சித் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இதன் மூலம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பரப்புரை செய்த நிலையில் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 99 வார்டுகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் பா.ஜ.க. கடந்த தேர்தலில் 4 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது 48 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ஹைதராபாத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.