டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் 5ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஒன்று திரண்டு டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.
இந்நிலையில் இன்று ஜேஎன்யு மாணவர்கள் இதை கண்டிக்கும் விதமாக பேரணி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜேஎன்யு வளாகம் முன்பு உள்ள கேட்டின் முன்னும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மண்டிஹவுசில் தொடங்கும் பேரணி முக்கிய சாலைகள் வழியாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை அடைகிறது.
தற்போது ஜனவரி 5ஆம் தேதி மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாகைகள், சிஏஏவுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை வைத்து பேரணியை தொடங்கியுள்ளனர்.