உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அதில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 150க்கும் குறைவான தொகுதிகளையும் என்று கூறியிருந்தது. அந்த முடிவுகளால், பங்குச்சந்தை வர்த்தகம் வரலாற்றில் இல்லாத ஏற்றம் கண்டது.
இதனையடுத்து, கடந்த 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. இந்த முடிவுகளால் பங்குச்சந்தை வர்த்தகம் ஒரேயடியாக வீழ்ச்சியடைந்தது. பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சியால் பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் பெரிய அளவில் சரிவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (07-06-24) நடைபெற்றது. அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சியினர், பிரதமர் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராகவும், நாடாளுமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். மேலும், கூட்டணிக் கட்சி ஆதரவுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகிறார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பங்குச்சந்தை வர்த்தம் ஏற்றம் கண்டுள்ளது. இன்று காலையில் சென்செக்ஸ் குறியீடு 75,074 புள்ளிகளுடன் தொடங்கிய வர்த்தகம், மாலை 3 மணியளவில் 76,752.33 புள்ளிகளாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதே போல், நிப்டி 468.75 புள்ளிகள் உயர்ந்து 23,290.15 புள்ளிகளாக எட்டியுள்ளது.