தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதே போல், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி ஆதரவை பெருக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணியை முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்துக்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “பெரியார் திடலுக்கு என்னை அழைத்தற்கு நன்றி. மேலும், இந்தியா கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி.
சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்களின் மூலம் தான் மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். பெரியாரின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் தான் நம்மை வழி நடத்தும். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.