நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது.
பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும் தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக, பா.ஜ.க கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன், அந்த கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை விட்டு விலகி இன்று (19-03-24) அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீதா சோரன், “கட்சிக்காக நான் 14 ஆண்டுகள் பாடுபட்டிருக்கிறேன். ஆனால் அதற்கான மரியாதை எனக்கு இல்லை. அதன் காரணமாகவே இந்த முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன். எனது கணவர் துர்கா சோரனின் மரியாதையை காக்கவே, மரியாதை இல்லாத இடத்தில் இருந்து நான் வெளியேறி இருக்கிறேன். மேலும், அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து நான் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறேன். ஜார்க்கண்டை காப்பாற்றுவதில் அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.