ஹரியானா முன்னாள் அமைச்சர் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்குக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த இளநிலை பெண் தடகள பயிற்சியாளரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக இளநிலை பெண் பயிற்சியாளர் ஒருவர் புகார் செய்தார். அந்த புகாரில், சந்தீப் சிங் தன்னை ஜிம்மில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தன்னை பின் தொடர்ந்ததாகக் கூறினார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை சந்திக்கும்படி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்தார்.
இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு ஹாக்கி அணியின் முன்னாள் இந்திய கேப்டன் சந்தீப் சிங் மீது சண்டிகர் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்த சந்தீப், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அதனால், தார்மீக அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சந்தீப் சிங் மீது புகார் கூறிய இளநிலை தடகள பெண் பயிற்சியாளரை பணி இடைநீக்கம் செய்து ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவில் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான காரணம் கூறப்படவில்லை. அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பெண் பயிற்சியாளர், “சில மாதங்களாக அரசின் உயர் அதிகாரிகள் எனக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். எத்தனை இடையூறுகள் வந்தாலும் விளையாட்டுத் துறை அமைச்சர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவேன். என்னை பணியில் இருந்து நீக்கினாலும் என்னுடைய உரிமைக்காக போராடுவேன். என் பணி இடைநீக்கம் நடவடிக்கையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் முறையிடுவேன்” என்று கூறினார்.