மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரம் பாஜக தரப்பினர் இதற்கும் மத்திய அரசிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என தெரிவித்து வருகின்றனர்.
தன் மீதான பதவி நீக்க நடவடிக்கை குறித்து நேற்று முன்தினம் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்த எனது பேச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. நான் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி இழிவாகப் பேசிவிட்டதாக அவரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, “சாவர்க்கர் குறித்து இழிவாகப் பேசக்கூடாது. அவர் எங்கள் கடவுள். இப்படி பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்” என எச்சரித்தார்.