மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு 8வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அரசைக் கடுமையாகச் சாடிய மேற்கு வங்க உயர்நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா கொல்கத்தாவில் பேரணி நடத்தினார். இருப்பினும் மம்தாவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது. இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவரின் மாமியார் துர்கா தேவி, தனது மருமகனைத் தூக்கிலிட வேண்டும் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “சஞ்சய் ராய் எனது மகளைத் திருமணம் செய்துகொண்டு 6 மாதம் நன்றாக வாழ்ந்தார். ஆனால் அதன் பிறகு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எனது மகள் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது, சஞ்சய் ராயின் சித்திரவதையால் கருசிதைந்தது. எனது மகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரின் மருத்துவச் செலவுகளை நானே ஏற்றுக்கொண்டேன். சஞ்சய் ராய் நல்லவர் இல்லை. அவரை தூக்கிலிடுங்கள். அவரால் தனியாக இந்த காரியத்தைச் செய்திருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.