ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா - ரஷ்யா ஆண்டு மாநாட்டிற்காக அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் டிசம்பர் ஆறாம் தேதி இந்த ஆண்டு மாநாடு நடைபெறலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த மாநாட்டின்போது இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பரஸ்பர பரிமாற்ற தளவாட ஒப்பந்தம் என்ற மிகமுக்கிய இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகவும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ரஷ்ய இராணுவம், இந்திய இராணுவத் தளங்களிலும், துறைமுகங்களிலும் உள்ள தளவாடங்களையும் வசதிகளை பயன்படுத்திகொள்ள முடியும். அதேபோல் இந்தியா இராணுவத்தால் ரஷ்ய இராணுவத் தளங்களிலும், துறைமுகங்களிலும் உள்ள தளவாடங்களையும் வசதிகளை பயன்படுத்திகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கூட்டாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே ரஷ்ய அதிபர் இந்தியா வரும் அதே சமயத்தில், ரஷ்யா வான்பாதுகாப்பு அமைப்பின் முதல் தொகுதியை இந்தியாவிற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு, ஐந்து வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ரஷ்யாவோடு 5.5 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் இந்தியா, இந்த வான்வெளி பாதுகாப்பு மண்டலங்களை வாங்க ஏற்கனவே முன்பணமும் செலுத்தியுள்ளது.
ஆனால் அதேநேரத்தில், 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா ஏற்றிய சட்டப்படி, ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும். இதனால் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.