
லஞ்சம் வாங்காததால் உடன் பணியாற்றும் சக ஊழியர்கள் மனதளவில் டார்ச்சர் செய்ததால் ஆர்.டி.ஓ அலுவலக பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியான சிந்து என்பவர் கடந்த 9 வருடங்களாக சீனியர் கிளார்க்காக பணியாற்றி வந்தார். அலுவலகத்தில் நேர்மையாக பணியாற்றி வந்த சிந்து திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததோடு லஞ்சம் வாங்க மறுத்து நேர்மையாக பணியாற்றி வந்துள்ளார். இதனால் சக ஊழியர்களுக்கு அவரை பிடிக்காமல் போக நாளடைவில் மனதளவில் டார்ச்சர் செய்ய தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிந்துவை தனிமைப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர் சக ஊழியர்கள். இந்நிலையில் சகோதரர் வீட்டிற்கு சென்றிருந்த சிந்து அங்கு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு சக ஊழியர்களே காரணம் என அவரது உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். அதேவேளையில் சிந்துவிற்கு அலுவலகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை அவர் வேறு தனிப்பட்ட காரணத்திற்காகத் தற்கொலை செய்திருக்கலாம் என மானந்தவாடி ஆர்.டி.ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.