பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (24.10.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் சேவை அளிப்பதற்காக இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கிருஷ்ணா நதியில் 3.2 கிமீ நீளத்துக்கு புதிய ரயில் பாலம் கட்டப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் அமராவதியை ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் நாக்பூருடன் இணைக்கப்படும். இதற்காக ரூ. 2 ஆயிரத்து 245 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர், ‘தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக இந்த ஆண்டு 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன’ எனத் தெரிவித்தார். இதனையடுத்து ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதிக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “அமராவதியை நாட்டின் சிறந்த நகரமாக மாற்ற விரும்புவதால், ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுகள்.
ஆந்திராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. விசாகப்பட்டினம் ரயில்வே மண்டலத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடியை அழைக்கிறோம். இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவுக்கு மத்தியில் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.