ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் (மான் கீ பாத்) நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி பொதுமக்கள் மத்தியில் உரையாடுகிறார். ஒவ்வொரு முறை அவர் உரையாடும் போதும் பல முக்கிய தகவல்களை வெளியிடுகிறார்.
இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசிய மோடி, ரிக்ஷா இழுத்து அதில் வரும் வருமானத்தின் மூலம் ஒன்பது பள்ளிக்கூடங்களைக் கட்டிய அகமது அலியை (82) வாழ்த்திப் பேசினார்.
அவர் தனது உரையில், ‘அசாம் மாநிலம் கரீம்கன்ச் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அகமது அலி என்பவர் ஒன்பது பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பி உள்ளார். ரிக்ஷா இழுக்கும் தொழில் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தில் அவர் இதைச் செய்திருக்கிறார். இதிலிருந்து, தேசம் கொண்டிருக்கும் மன உறுதியைப் பார்க்கமுடிகிறது’ என பேசினார்.
அசாம் மாநிலம் கரீம்கன்ச் பகுதி வங்காளதேசம் எல்லைப்பகுதியில் உள்ளது. நேற்று மோடி அகமது அலி குறித்து வாழ்த்திப் பேசிய நிலையில், அந்த கிராமமே அகமது அலியின் செயல்களைக் கொண்டாட விழாக்கோலம் போல காட்சியளித்தது.