Skip to main content

"மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு இருக்கிறது" - சட்டசபையில் மம்தா!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

west bengal

 

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டமாக நடைபெற்றது. அதன் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சில பகுதிகளில் வன்முறை வெடித்தன. அதில் 16 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வன்முறைகளுக்கு மத்தியில் மம்தா பதவியேற்றுக்கொண்டார்.

 

இந்தநிலையில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை இன்று (08.05.2021) கூடியது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய மம்தா, கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும், பாஜகவை விமர்சித்தும் பேசினார். 

 

மம்தா பேசியவை வருமாறு: “இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். அதற்கு 30,000 கோடி ஒதுக்க வேண்டும். அது மத்திய அரசுக்குப் பெரிய விஷயமில்லை. மேற்கு வங்கத்தின் மீது ஏன் இவ்வளவு பாரபட்சம்? பதவியேற்ற 24 மணி நேரத்திற்கு அவர்கள் (மத்திய அரசு), மத்திய குழுவை (மேற்கு வங்க வன்முறை குறித்து விசாரிக்க) அனுப்பியிருக்கிறார்கள். உண்மையில் பாஜக மக்களின் முடிவை ஏற்க தயாராக இல்லை. நான் ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை. அவர்கள் போலி செய்திகளையும் போலி வீடியோக்களையும் பரப்புகிறார்கள். 

 

தேர்தல் ஆணையத்தில் உடனடியாக சீர்திருத்தம் தேவை. மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு இருக்கிறது. அது ஒருபோதும் தலைவணங்காது. அனைத்து மத்திய அமைச்சர்களும் இங்கு வந்ததில் சதி இருக்கிறது. விமானங்கள், ஹோட்டல்களுக்கு அவர்கள் எவ்வளவு செலவிட்டார் என எனக்குத் தெரியாது. பணம் இங்கு நீரைப் போல் ஓடியது. இளம் தலைமுறை எங்களுக்கு வாக்களித்துள்ளது. இது எங்களுக்கு ஒரு புதிய விடியல். அறுதிப் பெரும்பான்மையுடன் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது அதிசயமான ஒன்று. மேலும் வரலாற்றுப்பூர்வமானது. இது மேற்கு வங்க மக்களாலும், பெண்களாலும் நடந்தது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்